4 August 2012

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

"ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு"

சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

நாம் இதனை எழுதி மாத்திரத்தில் இவர்கள் இப்படித்தான், அமல்களைக் குறைப்பவர்கள், அப்படித்தான் எழுதுவார்கள், வஹ்ஹாபிகள், குழப்பவாதிகள் என்று எம்மீது சீறிப்பாய்வதையும், எமெக்கிதிராக அவதூறுகள் பரப்புவதையும், பொதுமக்களைத் திசை திருப்பி சத்தியத்தை மறைப்பதையும் ஆலிம்கள் எனக் கூறிக் கொள்வோர் தவிர்த்து, ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.

குனூத் இடம் பெறும் நூல்களும் அறிஞர்களின் விமர்சனங்களும்
ஹதீஸ்கலை அறிஞர்களான அபூதாவூத். பைஹகி, இப்னு அபீஷைபா, இப்னுல் அதீர் போன்றோர் தமது நூற்களில் இதனைப் பதிவு செய்துள்ளனர்.

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் சுனனில் (அவர்களின் ஹதீஸ் நூலில்) வித்ர் குனூத் பற்றி ஒரு ஹதீஸை அறிவித்த பின் மற்றொமொரு செய்தியை பின்வருமாறு அறிவிக்கிறார்கள். அதாவது உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் தலைமையில் (ரமழானில்) மக்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இருபது இரவுகள் தொழுகை நடத்தினார். மிஞ்சிய அரைவாசியில் குனூத் ஓதுவார்…’ என ஹஸன் அல்பஸரி என்பவர் உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்திகள் பற்றி விpமர்சிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள் ‘ 

قَالَ أَبُو دَاوُد: وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ الَّذِي ذُكِرَ فِي الْقُنُوتِ لَيْسَ بِشَيْءٍ وَهَذَانِ الْحَدِيثَانِ يَدُلَّانِ عَلَى ضَعْفِ حَدِيثِ أُبَيٍّ… ( سنن أبي داود) 

குனூத் பற்றிக்கூறப்படும் இந்தச் செய்தி ஒன்றுக்கும் உதவாதது. இந்த இரு செய்திகளும் உபை பின் கஃப் (ரழி) அவர்களின் செய்தி பலவீனமானது என்பதைக் காட்டுகின்றது. (பார்க்க: சுனன் அபீதாவூத்) மேற்படி செய்தியை அபூதாவூத் இமாம் வழியாக பைஹகி அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

மேற்படி செய்தியில் காணப்படும் குறைகள்
மேற்படி செய்தியில் இடம் பெறும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ‘ஹஸனுல் பஸரி’ என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இறுதி இரண்டு வருட காலத்தில் பிறந்தவர். உமர் (ரழி) அவர்களை சந்திக்காதவர். இப்படிப்படிப்பட்ட ஒருவரால் இந்தச் செய்தி கூறப்படுவதை அறிஞர்கள் ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலை என வர்ணிப்பதுடன், அந்த அறிவிப்பையும் தள்ளுபடி செய்வர் என்பதையும் கருத்தில் கொண்டால் இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய, சட்டம் எடுக்க முடியாத அறிவிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

மேற்படி செய்தியை விமர்சிக்கும் இமாம்கள்
இந்தச் செய்தி ஒன்றுமல்ல, அது பலவீனமானது என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் ஏற்கெனவே கூறியுள்ளதை மேலே எழுதியுள்ளோம். இமாம் ஸைலயி என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த நூலான ‘அல்ஹிதாயா’ என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை திறனாய்விற்கு உட்படுத்தி ‘நஸபுர்ராயா’ என்ற நூலை எழுதியுள்ளார்கள். ரமழான் அரைவாசியில் ஓதப்படும் குனூத் பற்றிக் குறிப்பிடும்போது ‘ அது பற்றி இரண்டு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன எனக் கூறிவிட்டு, இமாம் அபூதாவூத் அவர்களின் கிரந்தத்தில் இடம் பெறும் மேற்படி ஹதீஸை முதலாவது ஹதீஸாக எடுத்தெழுதிய பின்னர் ‘;

وَهَذَا مُنْقَطِعٌ ، فَإِنَّ الْحَسَنَ لَمْ يُدْرِكْ عُمَرَ …. ( نصب الراية في تخريج أحاديث الهداية – ج 3 ص 175)

இது ‘முன்கதிஃ’ அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த நிலையாகும். ஏனெனில் ஹஸன் என்பவர் உமர் (ரழி) அவர்களை சந்திக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.) மேலும் மற்றொரு அறிவிப்பு அபூதாவூதில் இடம் பெறுகின்றது. அதில் وَفِيهِ مَجْهُولٌ ‘அதில் விலாசமற்ற, யார் என்று அறியப்படாதவர் இடம்பெறுகிறார்’ என அதே நூலில் விமர்சித்த பின்னர்,

وَقَالَ النَّوَوِيُّ فِي ‘ الْخُلَاصَةِ ‘ : الطَّرِيقَانِ ضَعِيفَانِ ‘ அல்ஹுலாஸா’ என்ற நூலில் இமாம் நவவி அவர்கள் ‘ இவ்விரண்டு வழிகளும் பலவீனமானவையே’ எனக் கூறியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ரமழானின் அரைவாசியில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்’ என அபூஆதிகா எனப்படும் தரீப் பின் சுலைமான் என்பவர் அனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை இரண்டாவது ஹதீஸாகக் குறிப்பிடும் அதே இமாம் ஸைலயி அவர்கள் இதனை இப்னு அதிய் அவர்கள் தனது ‘அல்காமில்’ என்ற (பலவீனமான அறிவிப்பாளர்கள் பற்றி குறிப்பிடும்) நூலில் குறிப்பிடுவதாகக் கூறிய பின்

وَأَبُو عَاتِكَةَ ضَعِيفٌ ، قَالَ الْبَيْهَقِيُّ : هَذَا حَدِيثٌ لَا يَصِحُّ إسْنَادُهُ . ‘அபூ ஆதிகா பலவீனமானவர்’ எனத் தீர்ப்பை முன்வைப்பதோடு, இது அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத ஹதீஸ்’ என இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.(பார்க்க: நஸபுர்ராயா, பாகம்: 3.பக்கம். 175) 

இந்தச் செய்தி பற்றி விபரிக்கும் ‘அபூதாவூதின் விரிவுரை அறிஞரான அல்முபாரக்பூரி என்பவர், மேற்செய்தியானது ‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற மறைமுகமான, சந்தேகத்திற்கு இடம்பாடான சொற்றடரைக் கொண்ட ஒரு செய்தியாகவே அறிவிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளதையும் இதன் பலவீனத்தின் காரணிகளில் முக்கியமான காரணியாக இங்கு கவனித்தில் கொள்ளவும் வேண்டும். (அவ்னுல் மஃபூத் ஷரஹ் சுனன் அபூதாவூத். பாகம்: 3: பக்கம், 360) (இலத்திரனியல் நூலகம். இரண்டாம் வெளியீடு.) 

குறிப்பு: அறிவிக்கப்படுகிறது, சொல்லப்படுகிறது போன்ற அமைப்பை ஹதீஸ் கலை அறிஞர்கள் ‘ஸீகதுத் தம்ரீழ்) நோய், பலவீனம் சார்ந்த அமைப்பு என வர்ணிப்பர். குறித்த ஹதீஸை ஏற்கமுடியாது என்பதற்கான காரணிகளில் இதுவும் உள்ளடக்கப்படும் என்பதைக் கவனித்தில் கொள்ளவும்.